சென்னை: தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி மகனின் திருமணம் திருவான்மியூரில் இன்று (மார்ச் 16) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ், தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தொல்.திருமாவளவன், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீட் விலக்கு மசோதா
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மேடைக்கு முன்பாக இருந்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை அழைத்து மேடையில் அமர வைத்தார். பின்னர் மேடையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'திருச்சி என்றால் நேரு, நேரு என்றால் திருச்சி தான். மாநாடு என்றால் நேரு தான்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். நேற்று நான், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோருடன் சென்று அதன் நிலை குறித்து விசாரித்தோம். இரண்டாவது முறையாக நான் உங்களுக்குத் திருப்பி அனுப்ப முடியாது. குடியரசுத்தலைவருக்குத் தான் அனுப்ப வேண்டும்’ என்றார். மேலும் நிச்சயம் நீட் விவகாரத்தில் விலக்கு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ராமஜெயம் கொலை வழக்கு
மேடையில் பேசிய துரைமுருகன், 'ராமஜெயம் கொலை அரசியல் ரீதியான கொலை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறேன். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்’ என அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, 'தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் எங்களையே சந்தேகப்படுகின்றனர். ஆகையால், இந்த வழக்கு எனது குடும்ப வழக்கு, இதில் உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்’ என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
விசாரணை தொடங்கியது
தமிழ்நாட்டையே உலுக்கிய ராமஜெயம் கொலை வழக்கு குறித்து, சிபிஐ விசாரணையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது ராமஜெயம் கொலை வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணை நடத்த தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதன், ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ டிஎஸ்பி ஆர்.ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பகத் சிங் மண்ணில் பதவியேற்றார் பகவந்த்!