சென்னை: பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைவு செய்தியறிந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆனைமுத்து மகனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:
தந்தை பெரியார் கொள்கையை நெஞ்சில் ஏந்தி, பகுத்தறிவு - சமூகநீதிப் பாதையில் பயணித்து, முதுமையிலும் பொதுத் தொண்டாற்றிய மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் மறைவு திராவிட இயக்கத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.
பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்த அய்யாவின் பெரும்பணியும், சிந்தனையாளன் என்ற சீரிய இதழ் வாயிலாக அவர் வழங்கிய கருத்துகளும் என்றும் நிலைத்திருக்கும்.
பெரியார் பெருந்தொண்டர் அய்யா ஆனைமுத்து அவர்களின் மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.