சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாகத் திறக்கப்படுவது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அதில், “ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ பிராணவாயு உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் பங்கேற்று, கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.
மருத்துவ பிராணவாயு உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் எனவும், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
இம்முடிவு தற்காலிகமானதுதான். திமுக ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.