நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள மு.க. அழகிரிக்கு வாழ்த்து சொல்லும் வகையில், விரைவில் அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்துடன், ’எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்றும் 'Fill in the blanks' என்றும் குறிப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதேபோல் ’ராசியானவரே! மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ என்று திமுக கொடியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற சுவரொட்டிகள் சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தாலும், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் எதிரிலும் ஒட்டப்பட்டுள்ளதால், திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் அடுத்த திமுக தலைவர் என்று மு.க. ஸ்டாலின், அழகிரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஸ்டாலினைப் பற்றி அழகிரி வெளிப்படையாக விமர்சனம் செய்யும் அளவிற்கு போனதையடுத்து, அன்றைய திமுக தலைவர் கருணாநிதியால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி.
அதன்பின்னர் திமுகவின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும், தலைமை குறித்தும் அவ்வப்போது கருத்துகளை அவர் தெரிவித்துவந்தார். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் அழகிரி குறித்த செய்தி எதுவும் வெளியில் தெரியாமலிருந்தது.
நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் நெருக்கமான மு.க. அழகிரி, அரசியல் கட்சி தொடங்கப்போவதாக ரஜினி கூறியபோது அவருக்கு ஆதரவாகப் பேசினார். நடிகர் ரஜினியையும் ஒருமுறை அவர் வீட்டிற்கே போய் சந்தித்து வந்தார். இந்நிலையில் ரஜினியுடன் அழகிரி இருக்கும் சுவரொட்டியும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஒருகாலத்தில் திமுகவின் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த அழகிரியின் தற்போதைய மனநிலையையே அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.
இதையும் படிங்க: 'மறக்கமுடியாத அனுபவத்தை அளித்த பியர் கிரில்ஸ்க்கு நன்றி' - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி