சென்னை: திமுக கட்சியிலிருந்து மு.க அழகிரி நீக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அரசியலில் இன்னும் அவரின் பெயர் ஒலித்துக்கொண்டு தான் உள்ளது. சமீபத்தில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களை கூட்டி மதுரையில் கூட்டம் நடத்தினார். அதில் அவர் பேசும் போது, "ஸ்டாலினால் நிச்சயம் முதலமைச்சர் ஆக முடியாது. என் ஆதரவாளர்கள் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக விட மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையின் போது மு.க.அழகிரி - அமித்ஷா சந்திப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம், அமித்ஷாவின் வருகையின் போது பாஜகவில் இணைந்தார்.
அதே போல் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியான பின்னர் அழகிரி - ரஜினிகாந்த் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. அவை அனைத்தும் வெறும் தகவலாகவும், செய்தியாகவும் கடந்தது. இதற்கு முன்னதாக கருணாநிதி மறைவை தொடர்ந்து சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தினார்.
அப்போதும் விரைவில் அழகிரி கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்டது. அதன் பின்னர் வெளிச்சம் இன்றி சென்றார் அழகிரி. நாடாளுமன்ற தேர்தலின் போதும் அழகிரி கட்சி தொடங்குவது பற்றி பேசப்பட எப்போதும் போல் அவையனைத்தும் வெறும் செய்தியாகவே முடிந்தது. எது என்ன நடந்தாலும் திமுக தரப்பில் ஒருவர் கூட அழகிரி பற்றி வெளிப்படையாக பேசுவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மு.க.அழகிரி பெயரை பயன்படுத்தி திமுகவை விமர்சித்து வருகிறார். சசிகலா வருகையால் அதிமுக பிளவு படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினால், மு.க.அழகிரியால் திமுக உடையும் என பதிலடி கொடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மு.க.அழகிரி கட்சி தொடங்குவார், திமுக கட்சி உடையும், சொந்த அண்ணனுக்கு இப்படி செய்த ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு என்ன செய்வார் போன்ற கடும் விமர்சனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.அழகிரியை தொடர்புபடுத்தி, அவரையே முன்வைப்பது வெறும் அரசியலிலா இல்லை அதற்கு பின்பு காரணம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி நம்மிடம் தொலைப்பேசி வாயிலாக பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "மு.க.அழகிரிக்கு வருத்தம் இருப்பதை மறுக்க முடியாது. திமுக கட்சியில் அவருக்கோ அல்லது அவர் மகனுக்கோ ஏதேனும் பதவி எதிர்பார்கிறார். என்னை பொறுத்தவரை என்ன சண்டை, மாற்றுக் கருத்து இருந்தாலும் மு.க.அழகிரி இறுதியில் திமுக-விற்கு எதிராக எதும் செய்ய மாட்டார் என்று எண்ணுகிறேன். குறிப்பாக அவர் எதிர்பார்க்கும் பதவி அதிமுகவிற்கோ, பாஜகவிற்கோ சென்றால் கிடைக்காது. அப்படி அவர் திமுகவிற்கு எதிரான நிலைபாடு எடுத்து தனிக் கட்சி தொடங்கினாலும் திமுகவிற்கு பெரிய பாதிப்பு இருக்காது என்பது என் கருத்து" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலாவை கட்சியில் இணைக்க மறுக்கும் எடப்பாடி... சூடுபிடித்துள்ள தமிழ்நாடு தேர்தல்களம்