சென்னை மாநகராட்சியின் சில மண்டலங்களிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொது சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 726 அலுவலர்கள் ஏற்கனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர 80 அவசர ஊர்திகள், 33 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உட்பட 173 வாகனங்களும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக மேலும், சென்னை மாநகராட்சிக்கு 61 நடமாடும் குழுக்களும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 10 குழுக்களும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 5 குழுக்களும் என மொத்தம் 81 நடமாடும் விரைவு மருத்துவ குழுக்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு ஈடுபடுத்தப்படவுள்ளன. இதனை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நடமாடும் விரைவு மருத்துவ குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தி, தொற்று பாதிக்கப்பட்டவர்களை உரிய சோதனைகள் மூலம் கண்டறியும் பணிகளையும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கே சென்று நோய் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதன் மூலம் சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு கரோனா!