சென்னை: ஆங்கில நாளிதழில் நேற்று தமிழ்நாட்டில் நான்கு பெரிய திட்டங்களைக் கைவிட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் பல ஆண்டு காலமாக முந்தைய ஆட்சியிலிருந்த சுணக்கத்தை தீர்க்கும் வண்ணம், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் இப்போது சாலைப்பணிக்குத் தேவையான மண் எடுப்பிற்கான அனுமதி இந்த அரசு பொறுப்பேற்ற பின் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி துரிதப்படுத்தி பணிகள் பாதிக்காத வண்ணம் தேவைக்கேற்ப அனுமதி அளித்து வருவதாகத் தெரிவித்தார்கள்.
தலைமைச் செயலாளர் அளவில் 13.07.2021 அன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளில் தொடர்புடைய துறைகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, மண் எடுப்பிற்கு அனுமதி அளிக்கவும், நில எடுப்பில் தனிக் கவனம் செலுத்தி, பணிகளுக்குத் தேவைப்படும் நிலம் கையகப்படுத்துவதை துரிதப்படுத்தி தேவையான நிலத்தை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
உடனடி அனுமதி
அதன் தொடர்ச்சியாக, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது . மேலும், 12.09.2021 அன்று பொதுப் பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர், நீர்வளம் மற்றும் கனிம வளத் துறை அமைச்சர் ஆகிய அமைச்சர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறை செயலர்களுக்கும் கடிதம் மூலம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் தடையின்றி மேற்கொள்ள கோரியுள்ள அனுமதிகளை உடனடியாக வழங்குமாறு கோரியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக செயலர், தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு 17.09.2021 அன்று எழுதிய நேர்முகக் கடிதத்தின் அடிப்படையிலும், புதுடெல்லியில் 12.10.2021 அன்று நடைபெற்ற ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பொதுப் பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் நடத்திய சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்ட திட்டப் பணிகள் துரிதப்படுத்துதலின் அடிப்படையிலும், மேலும், அரசு முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர் ஆய்வுக் கூட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர்களுக்கு மண் எடுப்பிற்கான அனுமதி, நில எடுப்பில் உள்ள குறைகளைக் களைந்து பணிகள் தாமதப்படாதவண்ணம் துரிதப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
வனத்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், நீர்வள ஆதார துறைகளின் அனுமதிக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்துள்ள கடிதங்களின்படி அனுமதிக்கான நிலை குறித்தும், துறை சார்பாக ஒருங்கிணைத்தும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இதுவரை ஆறு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. பல்வேறு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி வரை மற்றும் நாகர்கோவில் சாலைப் பணிகள் இரு தொகுப்புகளாக நடைபெற்று வருகிறது.
ஆய்வுக்கூட்டம்
பொதுப் பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமையில் 16.12.2021 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமைப் பொது மேலாளர் (தொழில்நுட்பம்), இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதுடெல்லி, மண்டல அலுவலர்கள் சென்னை, மதுரை, திட்ட இயக்குநர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பணிகள் தொடர்பான ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் மண் எடுப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது என்றும், ஆனால், பெருமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், மண் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்கள். மேலும், மாற்று ஏற்பாடாகத் தனியார் நிலத்தில் மண் எடுக்க ஒப்பந்ததாரர்கள் இடம் தேர்வு செய்யவும் அதனடிப்படையில் விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ஒப்பந்ததாரர்களின் கடிதம் பெறப்பட்டவுடன் பணிகள் பாதிக்காத வண்ணம் அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க ஏதுவாக பொதுப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆகியோர் மூலம் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு,
நடவடிக்கை
உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிக்கான தடைகள் களையப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் எ.வ.வேலு நாளிதழ் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: PMK Ramadoss Speech: பாமகவிற்கு வாக்களிக்காமல் இருப்பது கொள்ளிக்கட்டையை தலையில் போடுவதற்கு சமம்..!” - மருத்துவர் ராமதாஸ்