மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ” நிவர் புயலின் போது மின்வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில், 5,484 பீடர்கள் உள்ளன. இதில் பாதுகாப்பு கருதி 2,250 பீடர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை, 1,317 பீடர்கள் சரிபார்த்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 933 பீடர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.
சென்னையில் 1,707 பீடர்களில் 177 பீடர்களுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 596 பீடர்களில் 176க்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 451 பீடர்களில் 154 பீடர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 322 பீடர்களில் 152க்கும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில், அதிகளவில் மழை பெய்திருந்தாலும், புயலின் வேகத்தைவிட மின்வாரியத்தின் வேகத்தால், 28 பீடர்களுக்கு மட்டும் தான் மின் இணைப்பு கொடுக்க வேண்டியுள்ளது. 80% மின் இணைப்புகள் இரவு 8 மணிக்குள் கொடுக்கப்பட்டு, மீதமுள்ள மின் இணைப்புகள் நாளைக்குள் வழங்கப்படும்.
சென்னையில் பெரும்பாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், முழுமையாக மின் விநியோகம் செய்யமுடியவில்லை. தண்ணீர் வடிய வடிய அந்தப்பகுதிகளிலும் மின் இணைப்பு கொடுக்கப்படும்.
அரசு எடுத்த நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் இதுவரை 144 மின் கம்பங்களும், 10 உயர்மின் அழுத்த கம்பங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. துணைமின் நிலையங்கள், உயர்மின் அழுத்த கடத்திகள் ஆகியவற்றுக்கு பாதிப்பில்லை. நிவர் புயலால் மின்வாரியத்திற்கு 1.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் வழக்கால்தான் மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் நியமனத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு பின்னர் பணியிடங்கள் உறுதியாக நிரப்பப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருபோதும் தனியாா் மயம் ஆக்கப்படாது. ஆள் பற்றாக்குறையால் இடைக்காலமாக 4 துணை மின் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. தேவையான பணியாளர்கள் நியமனத்திற்குப்பின், அவற்றை தனியாரிடம் இருந்து மீண்டும் மின்வாரியமே பெற்றுக்கொள்ளும் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிவாரண உதவிகளை வழங்கிய ஓபிஎஸ்!