சென்னை:சென்னை குரோம்பேட்டையில் தமிழ்நாடு காவல் துறை மற்றும் அவள் விகடன் இணைந்து நடத்தும் ஹலோ சீனியர் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எஸ்.ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே வயது மூத்தவர்களுக்காக இரண்டாவது தனி மருத்துவமனை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. வயது மூத்தவர்கள் மருத்துவமனையாக கிண்டி கிங்க்ஸ் மருத்துவமனை இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்பட உள்ளது.
மேலும் வயது மூத்தவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது, அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பள்ளாங்குழி, கேரம்போடு, போன்ற விளையாட்டுக்கு தனி அறை தொடங்கப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் முதியோருக்கு தனி வார்டு அமைக்கபட உள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு அரசும், மக்கள் நல்வாழ்வு துறையும் முதியோருக்கு உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனையடுத்து குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் முதியோர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது, கேரளா முதலிடமும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும் உள்ளது. முதியோர்கள் கவலையில்லாமல் வாழ்ந்தாலே நீண்டநாள் வாழலாம், கூட்டுக்குடும்பங்கள் குறைந்துவருவதால் முதியோர்கள் கஷ்டப்படுகின்ற நிலைமை உள்ளது, கூட்டுக்குடும்பங்கள் மெல்லமெல்ல குறைந்த பிறகு முதியோர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"நமது குப்பை, நமது பொறுப்பு" - குப்பை தரம் பிரிப்பது தொடர்பான விழிப்புணர்வு!