சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மருந்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக புகார்கள் எழுந்துவருகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் ஆலோசனை மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'தமிழ்நாட்டில் மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. இதுகுறித்து பலமுறை விளக்கம் அளித்தும் மீண்டும் இதுபோன்ற செய்திகள் வருகின்றன. ஒரு வாரத்தில் 5 அல்லது 6 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
அவற்றில் எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டை ஒன்று (அ) இரண்டு பேர் தேவை இல்லாமல் தெரிவிக்கின்றனர். நிர்வாக ரீதியாக ஒரு சிலரை பணியிடை மாற்றம் செய்து இருக்கிறோம், அவர்கள் அரசின் மீது உள்ள கோபத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இதற்கு முன்பு 32 இடத்தில் மட்டும்தான் மருந்து கிடங்து என்பது இருந்தது. இப்போது 4 மருத்துவ கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாவட்டம் தோறும் மருந்து கிடங்கு என்கின்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது. Iv fluids மருந்து சில இடங்களில் தட்டுப்பாடு இருந்தது உண்மைதான். இதற்கு காரணம், உக்ரைன் போர் இருந்ததால் சில இடங்களில் இறக்குமதி செய்வதற்கு காலதாமதமனது.
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்திற்கு மருந்துகள் தட்டுப்பாடு இருந்தது என்ற செய்தியும் வெளியாகியது. அந்தத் திட்டத்திற்கு என்று தேவைப்படும் 32 வகையான மருந்துகள் அந்தந்த மாவட்ட மருந்து கிடங்கில் 3 (அ) 4 மாத காலத்திற்கான இருப்புகள் உள்ளன. தட்டுப்பாடு என்று சொல்பவர்கள் மருந்து கிடங்கை வந்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குகிறோம்.
பொது மக்கள் அப்படி மருந்து தட்டுப்பாடு இருந்தால் 104 புகார் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பு இருந்ததால் காய்ச்சல் பாதிப்பு பெரிதாக தெரியவில்லை. இப்போது ஒரே நாளில் மட்டும் 47 பேர் இன்ஃபுளுவென்சா (influenza) காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழ்நாட்டில் 965 பேர் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் பாதிப்பின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அதேபோல பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கவேண்டும். தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை.
மருந்து சீட்டு இல்லமால் எந்த மருந்தும் கொடுக்கக்கூடாது என்று மருந்து கடைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் நிலம் வாங்க விலையில் 50% மானியம்