சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 173ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மா. சுப்பிரமணியன் திருவான்மியூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், "வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 173ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் சுபாஷினிக்கு வீடுகள்தோறும் சென்று வாக்குச் சேகரித்துவருகிறோம். திமுக, அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 10 நாட்களாக மக்களிடம் வாக்குச் சேகரித்துவருகின்றனர்.
மேலும் ஒன்பது மாத திமுக ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு மிகப்பெரிய அங்கீகாரத்தைத் தந்து வேட்பாளர் பரப்புரை செல்லும் வழியெல்லாம் மக்கள் பேராதரவு தருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயமாக நூற்றுக்கு நூறு விழுக்காடு திமுக, கூட்டணி கட்சி வெற்றிபெறும்" எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் வரும் என்று ஓபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு, முதலில் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வெற்றிபெறட்டும் என்றும், பிறகு நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி பேசலாம் எனவும் பதில் அளித்தார்.
மேலும் திமுக அல்வா கொடுத்து ஆட்சிக்கு வந்தது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கருத்திற்குப் பதில் அளித்த மா.சு., "செல்லூர் ராஜுவை அனைவரும் அறிவீர்கள், நீர் ஆவியாவதைத் தடுப்பதற்கு தெர்மாகோலை வைத்தவர். அல்வா கண்ட ஊர் பக்கத்தில் இருப்பதால் அவருக்கு அல்வாவைப் பற்றி மட்டும்தான் தெரியும்” என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை மீரா மிதுனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்