சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய உறுப்பினர் மா. சுப்பிரமணியன், “மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் அடிப்படை வசதிகள், கட்டடங்கள் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, மீண்டும் மாநகராட்சி மூலதன நிதி மூலமாகவே நிதி வழங்கப்படுமா” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சென்னை மாநகராட்சியில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் என 281 பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.
2011ஆம் ஆண்டு முதல், ஐந்தாண்டுகளில் 29.51 கோடி ரூபாய் மதிப்பில் 33 பள்ளிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளிகளுக்குத் தேவையான கட்டுமான பணிகள் உள்பட அனைத்திற்கும், மாநகராட்சி மூலதன நிதி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிய இரண்டின் மூலமாகவும் வழங்கப்படுகிறது. இருப்பினும், மூலதன நிதி தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொல்லிமலை ரகசியம் - துரைமுருகன் வேண்டுகோள்!