சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்குத் தேர்வான ஐந்தாயிரத்து 336 பேருக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை எனக் கூறி ஒரு சில மாவட்டங்களிலிருந்து விடுபட்ட கேங்மேன் நபர்கள் தமிழ்நாடு மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் இன்று காலை போராட்டத்தைத் தொடங்கினர்.
எனினும் காவல் துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி சமுதாயக்கூடங்களில் தங்கவைத்தனர். பின்னர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை எட்டு பிரதிநிதிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர் பணியில் ஈடுபட்டுள்ள தங்களை கடந்த அரசு புறக்கணித்துவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். எஞ்சியுள்ள ஐந்து ஆயிரம் பணியிடங்களில் தங்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் மனுவில், "எழுத்துத் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். ஆனால் எங்களுக்குப் பணி ஆணை வழங்காமல் எழுத்துத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள், அதாவது நூற்றுக்கு 0, 2, 5, 7, 8, 12 உள்ளிட்ட மதிப்பெண்கள் எடுத்துள்ள பல நபர்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈடிவி பாரத் இந்தச் செய்தியை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில், "கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் நடத்தப்பட்ட கேங்மேன் பணி நியமனத்தில் வஞ்சிக்கப்பட்ட ஐந்தாயிரத்து 336 பேர் சார்பாக எட்டு பேர் இன்று தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்து முறையிட்டார்கள். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.