சென்னை: வடபழனி முருகன் கோயிலில் மாற்றுத்திறனாளிகளான G.நித்யானந்தம் - M. வசந்தி மற்றும் S.அண்ணாமலை - P.ராதா ஆகிய இணையருக்கு திருமணத்தை நடத்தி வைத்து அதற்கு உண்டான சான்றிதழையும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, 'திமுக அரசு பொறுப்பேற்றபிறகு அறநிலையத்துறையில் வரலாறு காணாத அளவிற்குப் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் முதலமைச்சர் வழிகாட்டுதல்களோடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறையின் பொற்காலமாகப் பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருமணம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயிலில்களில் இலவச திருமணம் நடத்த வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தபோது ஏற்கவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்றதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயிலில்களில் இலவச திருமணத்திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிதம்பரம் கோயில் குறித்து சட்டவல்லுநர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறோம். இணை ஆணையர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணை அறிக்கை பெற்றதும் இந்த பிரச்னை குறித்து முதலமைச்சர் மேற்பார்வையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்த்திருவிழாவில் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளப்படும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட 1 லட்சம், திருத்தல மரங்கள் நடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் நடப்படும். இதுவரை எத்தனை மரங்கள் நடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளுக்கு பணம் மீதுதான் அக்கறையா? மக்களின் உயிர் மீது இல்லையா? செந்தில்குமார் எம்பி கேள்வி