சென்னை: 'நிர்பயா' திட்டத்தின்கீழ், சென்னையில் 2500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது; விரைவில் இது நடைமுறைக்கும் வரும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஜூலை 12ஆம் தேதி முதல் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அன்று முதல் தற்போது வரை அரசு மாநகரப் பேருந்துகளில் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர்.
56% பெண்கள் பயணம்
தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்து 222 நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று (ஜூலை 14) மட்டும் பேருந்துகளில் 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் பேருந்துகளில் மொத்தப் பயணம் செய்பவர்களில் 56 விழுக்காட்டினர் பெண்களாக உள்ளனர்.
குறிப்பாக திருநெல்வேலியில் 68 விழுக்காடு பெண்கள் பேருந்துகளில் பயணம் பேற்கொள்கின்றனர். 'நிர்பயா' திட்டத்தின்கீழ், சென்னையில் 2 ஆயிரத்து 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது; விரைவில் இது நடைமுறைக்கும் வரும்.
பழவேலி கிராமத்திற்கு பேருந்து
நேற்று செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி எனும் கிராமத்தில் பேருந்துகள் இயக்க முதலமைச்சருக்கு கோரிக்கை வந்ததன் அடிப்படையில் மதியத்திலிருந்தே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்க ஆரம்பித்த நாளிலிருந்து 364 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் படிப்படியாக மீண்டும் இயக்கப்படும். இது தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்து சேவை மக்களின் பயன்பாட்டுக்காக இருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
மகளிருக்கு பணம் மிச்சம்
இதனால் பேருந்து சேவை சீரமைக்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் 5 ஆயிரத்து 741 திருநங்கையர்கள், 51 ஆயிரத்து 615 மாற்றுத்திறனாளிகள், 8 ஆயிரத்து 356 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.
இத்திட்டத்தினால் மகளிருக்கு பணச் செலவு மிச்சமாகிறது. அந்த மிச்சமாகும் பணத்தை குடும்பச் செலவுக்கு பயன்படுத்துகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயணச்சீட்டு விலை உயர்வா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி!