சென்னை: அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பதனம் செய்து, பேக்கிங் செய்யும் தொழிற்சாலையில் தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி நேரில் சென்று பால் விநியோகம் செய்வதை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பேசுகையில், 'தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம், காக்களூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதி உள்ள ஆவின் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு முறையாகப் பால் கொள்முதல் செய்யப்பட்டு, அதைப் பதனிட்டு விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
படகுகளில் பால் விநியோகம்
கடந்த முறை ஆட்சியாளர்களின் கவனக்குறைவால் பால் லிட்டருக்கு 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த முறை அது போன்ற நிலை மக்களுக்கு ஏற்படாது. சென்னை மற்றும் சென்னைப் புறநகரில் 12 லட்சத்து 20 ஆயிரம் ஆவின் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல் தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்கும்.
அதேபோல் 6 லட்சத்து பத்தாயிரம் சில்லறை வணிகர்களும் 126 வாகனங்களில் 2,000 சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகத் தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்படும். மேலும், நீர் தேங்கி உள்ள தாழ்வானப் பகுதிகளில் படகுகள் மூலம் சென்று, ஆவின் பால் விநியோகம் செய்யப்படும்' என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழை நிவாரணம் - ரூ.2,000 வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்?