சென்னை: பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதில், பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித் துறையினரால் நடத்தப்படும் என அறிவித்தார். இதனை செயல்படுத்திடும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.
பாரதி நினைவு நூற்றாண்டு
பின்னர், இந்நிகழ்வின் போது அமைச்சர் பேசியதாவது, "மகாகவியின் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சென்னை கோட்டையில் சுதந்திரத் தின விழாவில் உரையாற்றிய போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைக்கு எல்லாம் மலர் மாலை அணிவித்திட வேண்டும் என்று சொல்லி செய்தித்துறைக்கு உத்திரவிடப்பட்டு அவை கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வகையில், பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை தொடங்கிவைப்பதில் நான் பெருமையடைகிறேன்.
கோயம்பேட்டில் புகைப்பட கண்காட்சி
கனவு மெய்ப்பட வேண்டும் போன்ற செய்திகளை ஆணித்தரமாக இந்த மக்களுக்கு எடுத்துரைத்தார். இந்த மண் உள்ளவரை, மனிதன் உள்ளவரை அவருடைய இந்தக் கவிதை நிலைக்கும். விடுதலைப் போரட்டத்திற்காக அவர் கொடுத்த குரல் இன்றைக்கு விடியலை ஏற்படுத்தி, ஓங்கி ஒலிக்கிறது.
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எத்தலப்ப நாயக்கர் இந்த தாய் மண்ணைக் காப்பற்றுவதற்கு எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவுக் கூறும் வகையில் அவர்களுக்கு நினைவரங்கம், திருவுருவச்சிலை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள், பெண் தியாகிகளை நினைவு கூரும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது. பண்டிகை காலத்தில் வெளியூர் சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் அக்கண்காட்சியை கண்டது மகிழ்ச்சியை அளிக்கின்றது.
முக்காலத்திற்குமானவர் பாரதி
நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு தங்களது இன்னுயிரை நீத்தவர்களை போற்றக் கூடிய தமிழ்நாடு முதலமைச்சர், விடுதலைப்போரட்ட வீரர்களுக்கும், தமிழ்மொழி காத்த தியாகிகளுக்கும், திருவுருவச் சிலையும் மற்றும் நினைவு மண்டபமும் அமைக்க உத்தரவிட்டுள்ளார்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார் உரையாற்றியபோது, "20ஆம் நூற்றாண்டின் இணையற்ற புலவன் மகாகவி பாரதி. அவரது நினைவு நூற்றாண்டினை தமிழ்நாடு அரசு கொண்டாடுவது பாராட்டுக்குரியது. அதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரதி மரணமடைந்தார், இறந்தார் என்று நாம் குறிப்பிடுவதில்லை. காலமானார் என்றுதான் குறிப்பிடுகின்றோம்.
ஏனென்றால், இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் அனைத்திலும் அவர் வாழ்கின்றார். அதனால்தான் அவர் காலமானார் என்று குறிப்பிடுகிறோம். ஒப்பற்ற 14 திட்டங்களை எந்த அரசும் அறிவித்ததில்லை. எந்த கவிஞருக்கும் இந்த பெருமை கிடைத்ததில்லை. பாரதி சமூக விடுதலைக்காகவும், சுதந்திர விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், ஞான விடுதலைக்காகவும் போராடிய காரணத்தினால்தான் நுற்றாண்டுக்குப் பிறகும் பாரதி கொண்டாடப்படுகிறார்” என தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி உள்பட பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கள இசை மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிங்க: நீதிக்காக ஒரே ஒரு தோட்டாவை சுட்ட புரட்சியாளர் பகத் சிங்!