சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டப்பணிகள், சட்டப்பேரவை அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று (ஆக. 30) சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து ஆய்வின்போது அமைச்சர் கூறியதாவது,"தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கையினால் உலகமே வியக்கும் வகையில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கத்தில் வரும் செப்.12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியினை சிறப்பாக நடத்திட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தப் போட்டி நடைபெறுவதையொட்டி மைதானம், பார்வையாளர்கள் இருக்கைகள், குடிநீர் வசதி மற்றும் மின்சாரம் தொடர்பான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும்; நமது வீரர்கள் அனைத்து சர்வதேச விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும்; பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மிகுந்த அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
மேலும், கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் விளையாட்டில் சாதனை படைக்கின்ற வகையில் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள் . தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக விளையாட்டு அரங்கங்கள் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மாநிலத்தில் 209 தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைத்திடவும், முதற்கட்டமாக இந்த ஆண்டு 10 இடங்களில் அரங்கங்கள் அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள், சென்னைக்கு அருகில் சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான பணிகளை அலுவலர்கள் விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அண்ணா மிதிவண்டிப் போட்டி, முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் செயற்கை இழை ஓடுதளம் (synthetic track) அமைத்திட உரிய நிதி கோரி பிரேரணைகள் தயார் செய்திடவும், முதற்கட்டமாக மாநிலத்தில் 10 இடங்களில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன தேவைகள் என்பது தொடர்பாக விவர அறிக்கை உடனடியாக தயாரிக்க வேண்டும்.
மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு விடுதிகளை எந்தவித குறைபாடுமின்றி பராமரிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்துடன், முறையான பயிற்சி மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும். கிராம, வட்டார மற்றும் நகர அளவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து புதிதாக சிறு விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், கிராம, நகர்ப்பகுதிகளில் ஏற்கனவே உள்ள விளையாட்டு மைதானங்களை சீரமைத்தல், வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டில் முதன்மையான இடத்தை பெறுகின்ற வகையில் அனைத்து விளையாட்டுத்துறை அலுவலர்களும் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலர் செல்வி அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயல் அலுவலர்/உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்0திகேயன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோயில்களின் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் அமைச்சர் சேகர்பாபு அறிவுரை