சென்னை: தகவல் தொழில் நுட்பவியல் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசுத்துறை அலுவலர்களுக்கு இணையவழி பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.
இணையவழி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்காக தமிழ்நாடு தொழில்துறை எல்காட் நிறுவனம், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNEGA) மற்றும் சி-டாக் நிறுவனம் இணைந்து இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியினை முதன்மை தகவல் பாதுகாப்பு அலுவலர் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படுகிறது.
இப்பயிற்சியின் மூலம் 3000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளனர். இப்பயிற்சியானது 100 இணைய வழி பயிற்சிகளையும், 20 அலுவலக வகுப்பறை பயிற்சிகளையும் கொண்டதாகும். பயிற்சியினை தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
தரவுகளை பாதுகாக்க நடவடிக்கை
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், “சைபர் செக்யூரிட்டி மிகவும் முக்கியமானது. தரவுகளை பாதுகாப்பதும் முக்கிய அம்சமாக மாறி உள்ளது. சைபர் செக்யூரிட்டி ஆர்க்கிடெக்சர் என்ற கட்டமைப்பை உருவாக்கி தரவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், 3 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் இணையதளத்தை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற இணையதள முடக்கங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த பத்தாண்டுகளாக இ-சேவை மையங்களில் மக்களுக்குத் தேவையான போதிய சேவைகள் இடம்பெறாமல் இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்தபின் புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இ- சேவையில் விரைவில் 2.0 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விரைவாகவும் எளிமையாகவும் சேவைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
தனியார் இ-சேவை மையம் மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக இ-பேமண்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் : ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து