தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் தனித்திருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஐந்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனை ஆவடி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான கே. பாண்டியராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”மக்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல ஊரடங்கு உத்தரவு குறித்து விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர். இன்று முதல் நாள் என்பதால் காவல் துறையினர் அறிவுரை கூறி வருகின்றனர். இனிவரும் காலங்களில் வெளியில் சுற்றினால் நடவடிக்கை கடுமையாக இருக்கும். ஊரடங்கை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவசியமில்லாமல் வாகனங்களில் வருவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: 'கரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு வளாகம்' - அமைச்சர் விஜய பாஸ்கர்