சென்னை: மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரியில் கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்குப் பாராட்டு கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசிகள் வந்த எண்ணிக்கை, பயன்படுத்திய தடுப்பூசிகள் எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கையாகக் கேட்டிருக்கிறார்.
நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள்
புதிய அரசு பதவியேற்ற மே 7ஆம் தேதிமுதல் நாள்தோறும் வெளியிட்டுவருகிறோம். அத்தோடு வெள்ளை அறிக்கை வெளியிடுவதும் எங்களின் கடமையாகும். இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 32 ஆயிரத்து 170 தடுப்பூசிகள் வந்துள்ளன.
இதுவரை ஒரு 76 லட்சத்து 19 ஆயிரத்து 174 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். ஏழு லட்சத்து 15 ஆயிரத்து 570 தடுப்பூசி மருந்து கையிருப்பு உள்ளது. இதில் அரசியல் செய்யக்கூடாது என விரும்பினோம். ஆனால் அவர் வெள்ளை அறிக்கை கேட்டதால் சொல்கிறோம்.
அதிமுக ஆட்சியில் 103 நாள்களில் 63 லட்சத்து 28 ஆயிரத்து 407 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி 61 ஆயிரத்து 441 நபர்களுக்கு சராசரியாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திமுக அரசு பதியேற்ற பிறகு நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 297 தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் செலுத்தப்பட்டுவருகின்றன.
அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசிகள் வீண்
70 நாள்களில் ஒரு கோடியே 12 லட்சத்து 90 ஆயிரத்து 767 நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.முதல் தவணை ஒரு கோடியே 43 லட்சத்து 51 ஆயிரத்து 536 நபர்கள் செலுத்திக்கொண்டனர். 32 லட்சத்து 67 ஆயிரத்து 538 நபர்கள் இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
பல முயற்சிகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. மாவட்டம் வாரியாக வேண்டுமானாலும் விவரங்கள் கொடுக்கத் தயராக உள்ளோம். வரும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை தர தயாராக உள்ளோம்.
அதிமுக ஆட்சியில் வீணாக்கப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை நான்கு லட்சத்து 34 ஆயிரத்து 838 டோஸ். மொத்தம் ஆறு விழுக்காடு ஊசிகள் கடந்த ஆட்சியில் வீணாக்கப்பட்டன. தடுப்பூசி வரும் குப்பிகளில் 16% முதல் 26 % over filling மருந்து வருகிறது.
தமிழ்நாடு சாதனை - பாராட்டிய ஒன்றியம்
அதனைப் பயன்படுத்தி கூடுதலாக ஏழு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு கூடுதலாகப் போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் வீணடிக்கப்பட்ட ஊசிகள் போக மூன்று லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாகப் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 76 லட்சத்து 19 ஆயிரத்து 174 தடுப்பூசி மொத்தமாகச் செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே தடுப்பூசிகளை ஒதுக்கப்பட்ட டோஸ்களைவிட கூடுதலாக மக்களுக்குச் செலுத்தி சாதனை படைத்த மாநிலம் தமிழ்நாடு. இதை நேற்றைய நாள் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டைப் பாராட்டினர்" என்றார்.
இதையும் படிங்க: நாட்டின் இறையாண்மையில் தலையிட்டால் உங்கள் மொழியிலேயே பதிலடி- அமித் ஷா