சென்னை: சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு, சென்னை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஆகியோர் இன்று (ஆக. 29) வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், "சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு 7 லட்சத்து 76 ஆயிரத்து 209 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஓய்வூதியத் திட்டம் ஆதரவற்றவர்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் கடந்த ஆட்சியில் பல்வேறு விதிமுறைகள் பிறப்பித்ததால் ஏழரை லட்சம் பயனாளிகள் பாதிப்படைந்தனர்.
மீண்டும் உதவித்தொகை
தற்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் வயது முதிர்ந்தவர்களுக்கு ஆண் குழந்தைகள் இருந்தும் அவர்களால் பயன் இல்லை என்றாலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சொந்தமாக வீடு இருந்தாலும் வயது முதிர்ந்தவர்களுக்கு உதவித்தொகை தொகை வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு மீண்டும் உதவி தொகை தொடர்ந்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்புசி பல தரப்பினருக்கும் போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலா தலங்களான கொடைக்கானல் நகராட்சி 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தியுள்ளது. அதேபோல், பழனி நகரத்தில் ஓரிரு நாட்களில் 100 விழுக்காடு என்ற நிலையை அடைய உள்ளது.
100 விழுக்காடு தடுப்பூசி
மேலும், தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலங்களாக உள்ள திருவண்ணாமலை, நாகூர் வேளாங்கண்ணி போன்ற இடங்களிலும் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால், ஆசிரியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னை லயோலா கல்லூரியில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைக்க உள்ளேன்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க உள்ளதால் ஆசிரியர்கள் ஒரு தவணை தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலே பணிக்கு வரலாம். ஆனால், கட்டாயமாக இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கான குறைகள் தீர்க்கும் முகாம் தொடர்ந்து நடைபெறும்" என கூறினார்.