மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் நுழைந்தது.
தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல் உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற திமுக அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு விலக்குக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது.
நீட் தேர்வு: எதிர்க்கட்சியின் குழப்பம்
நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசிவருகிறார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெற அதிமுக அரசு போராடவில்லை.
திமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு அறிவிக்கையை ஏற்கவில்லை. நீட் விலக்கு கோரும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அந்தத் தீர்மானங்களுக்கு அதிமுக அரசு போதிய அழுத்தம் தரவில்லை. இதனால் தீர்மானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
நுழைவுத் தேர்வு தொடர்பாக திமுக அரசு குழு அமைத்து ஆய்வு செய்துவருகிறது. குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, நீட் தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்பது உறுதி. எனவே ஓபிஎஸ் குழப்பமான அறிக்கைகளை விட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; நீட் பயிற்சி வகுப்புகள் நடக்குமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்