சென்னை: 0சென்னை மடுவின்கரையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் சுமார் 52 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஏப். 30) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னை 2.O திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் கட்டமைப்புகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில், மாணவர்களுக்கு விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு திடல்கள் மேம்படுத்தப்படும்.
மேலும் 6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன், அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி வந்தவுடன் இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அதிகபட்ச மின் நுகர்வு.. வரலாற்றில் புதிய உச்சம்...