சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோது, வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகக் கூறி, முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில், திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
பின்னர், பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சார் ஆனதால் அவர் மீதான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 22-ம் தேதி, எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினம் அவர் ஆஜராகாததால், வழக்கு மே 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் அவதூறு வழக்கு குறித்த நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி, உயர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 25) விசாரணைக்கு வரவுள்ளது.