சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள நில வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்ந்த நிலையில் அந்தப்பகுதிகளில் பழைய சொத்து வரி மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.
ஒன்றிய அரசின் 15ஆவது நிதிக்குழுவின் அடிப்படையில் 2021-2022ஆம் ஆண்டு சொத்துவரி மார்ச் 31ஆம் தேதிக்குள் உயர்த்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்கும். பல்வேறு மக்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்வதற்கு மாநகராட்சிகளுக்குச் செலவு அதிகமாக உள்ளது.
15 மாநிலங்களில் சொத்துவரி உயர்வு:ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 15 மாநிலங்கள் தங்களது சொத்து வரியை நேற்றே உயர்த்தியுள்ளன. புனே, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் சொத்துவரி அதிகரித்துள்ளது. சென்னையை ஒப்பிடும்போது, 1.47 விழுக்காடு குடியிருப்புக்கு மட்டுமே 150 விழுக்காடு வரிவிதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்குச் சொத்துவரி மறு சீரமைப்புக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு 1500-2000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்படும். கடந்த காலங்களில் மாநகராட்சிகளில் விதிகளை மீறி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் எங்கெல்லாம் வரி குறைவாக வாங்குகிறார்கள் என்று கண்டறிவதற்காகத் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.
மேலும் அவர், '1987,1993 அதிமுக ஆட்சிக்காலத்தில் சொத்துவரி அதிகரித்தது. இதுகுறித்து நாங்கள் மக்களிடம் கூறுவோம். மாமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களது கணவர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட்டால் அவர்கள் மீது திமுகவைச் சேர்ந்தவர்கள் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார்கள் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்' எனவும் தெரிவித்தார்.
மேலும், 'பெட்ரோல், டீசல் எரிவாயு இவைகளெல்லாம் விலை உயர்த்தப்பட்டது. அதற்கெல்லாம் ஓ.பி.ஸ்., ஈ.பி.எஸ் போராட்டம் செய்யவில்லை. ஆனால், ஈபிஎஸ், ஓபிஎஸ் சொத்து வரி உயர்வு குறித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்' எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:மக்கள் கண்ணீருக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும்... ஓ. பன்னீர்செல்வம்...