சென்னை: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமாக சொத்து வரி குறித்த விவாதத்தை எதிர்க்கட்சியினர் முன் மொழிந்தனர். இதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு பதிலளித்துப் பேசினார்.
அப்போது, “தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வு: 2018ஆம் ஆண்டு மட்டும் அதிமுக ஆட்சியில் சொத்து வரி 50, 100 மற்றும்150 விழுக்காடு என்று தொடர்ந்து உயர்த்தப்பட்டது. மேலும் 1.79 விழுக்காடு முதல் 5.72 விழுக்காடு மடங்காக அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
நகர்புறங்களில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை 48.3 விழுக்காடு ஆக இருந்தது. 2036 ஆம் ஆண்டுக்குள் 60 விழுக்காடு வரை மக்கள் தொகை பெருக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளக்கம்: நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி தேவைப்படுகிறது.
இது போன்ற காரணங்களுக்காக குறைந்த அளவில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 77,000க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 1.4 விழுக்காடு சதவிகிதம் மட்டுமே சொத்து வரி தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில்..: கடந்த அதிமுக ஆட்சியில் செத்துவரி, வாணிக வரி என அனைத்து வரிகளும் 100 விழுக்காடு முதல் 300 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டன. ஆனால் தற்போதைய ஆட்சியில் 50 விழுக்காடு வரையில் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சொத்து வரியை உயர்த்தி மக்கள் காதில் பூ சுற்றிவிட்டனர்- அதிமுக விமர்சனம்!