சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "சென்னையில் வருவாய்த்துறை பணிகள் விரைந்து நடைபெற வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் உள்ளிட்டவை விரைவாக கொடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முதியோர் ஓய்வூதிய திட்டம், சொத்து சான்றிதழ் உள்ளிட்டவை நிலுவையில் இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்படாத வண்ணம், தேவையான பணத்தை செலவு செய்து பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதையடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து பணிகள் மேற்கொள்ளப்படுவதை நானும் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டோம். முன்னெச்சரிக்கையாக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேதங்கள் தவிர்க்கப்படும். இந்த வருடம் சென்னையில் மழை நீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகளானது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்கள் சான்றிதழ் எரிந்தது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து, முதலமைச்சருடன் ஆலோசித்து வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்கும். அரசின் நிதி நிலைமை சீரான பிறகு முதியோர் ஓய்வூதிய தொகை ஆயிரத்து 500 ஆக உயர்த்த ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள பேரிடர் நிதி நமது தேவையை பொறுத்தே கேட்டுள்ளோம், ஆனால் போதிய நிதியை அவர்கள் கொடுப்பதில்லை, பேரிடர் நேரத்தில் மாநில நிதியை செலவழித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என தெரிவித்தார்.