சென்னை: கடந்த மே மாதம் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவருகிறது. இதனால், நாளைமுதல் (செப்டம்பர் 1) பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டமாக, பள்ளி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள் தயார் நிலையில் இருக்கவும், கரோனா வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் கல்வி நிலையங்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு அறிவுரை
இந்நிலையில், சென்னை ஆலந்தூர் அடுத்த மீனம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளியில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி நேற்று (ஆகஸ்ட் 30) ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது பள்ளியில் நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு கரோனா வழிமுறைகளைக் கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆசிரியர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
அலுவலர்களுக்கு எச்சரிக்கை
இதன்பின்னர், பள்ளியின் அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத் துறை விடுதியில் ஆய்வுசெய்தார். அப்போது சமையலறையில் தேவையான உபகரணங்கள் இல்லையெனவும், கழிவறைகள் அசுத்தமாக உள்ளதாகவும், விடுதியில் உள்ள மின் வயர்கள் பாதுகாப்பான முறையில் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்த கயல்விழி உடனடியாக இவை அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என அலுவலர்களை எச்சரித்தார்.
இந்த ஆய்வின்போது சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் சுந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பெங்களூரு கோர விபத்து: திமுக எம்எல்ஏவின் மகன் உள்பட 7 பேர் மரணம்