சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேருவின் 132ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், கே பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது, கருணாநிதியின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்கவே அதிமுக தொடங்கப்பட்டதாகவும், 2021இல் கூட நரகாசுரன் இயக்கமாக இருக்கும் திமுகவை மக்கள் தலைதூக்க விடமாட்டார்கள் என்றும், வரும் தேர்தலில் நரகாசூரர்களை அழிக்கும் இயக்கமாக அதிமுக இருக்கும் எனவும் கூறினார்.
தொடர்ந்து முதலமைச்சர் பயணத்தின்போது கட்டாயப்படுத்தி கடைகளை மூட வைப்பது தொடர்பான கேள்விக்கு, இது மக்களை திசைத்திருப்ப வேண்டும் என்றே இப்படியான குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், திமுக தலைவர் அதை பொருத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார் என்றும், கடைகள் மூடினால் அதற்கு அரசு பொருப்பேற்க முடியாது என்றும் கூறினார்.
தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் உள்ளதாக கூறிய அவர், இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும், தொடர்ச்சியாக கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், முன்னாள் துணை வேந்தர் சூரப்பா குறித்த கேள்விக்கு, மடியில் கனம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என கூறியவர், புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்பது தான் நியாயம், அதை தவிர்க்க கூடாது என்றும், புகார் குறித்து உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவே குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டுதான் ஆக வேண்டும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.