சென்னை நந்தனத்தில் 6 வயது சிறுவன் சுதன், சாதனைகள் படைக்க வேண்டும் என்ற முனைப்போடு 12 கி.மீ. நிற்காமல் ஓடி சாதனை படைத்துள்ளார், இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று சிறுவனை வாழ்த்தினார். மேலும் சிறுவனுக்கு ரூ.50,000 தனது சொந்த பணத்தில் வழங்கப்படும் என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “அரசியலில் கருத்து விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் நாகரிகம் வேண்டும். ஆ. ராசாவைப் போல் தரம் தாழ்ந்து பேச அதிமுகவிலும் இருக்கிறார்கள். நாகரிகத்தை கடைப்பிடத்தல் அரசியலில் ஆரோக்கியமானது. 2ஜி வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. என்றைக்கு இருந்தாலும் அவர்கள் கம்பி எண்ணப்போவது உறுதி.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்தை நான் மதிக்கிறேன். எம்ஜிஆருடன் ரஜினியை ஒப்பிட முடியாது. ரஜினியின் அரசியல் வருகை அதிமுகவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. திமுகவிற்குதான் பாதிப்பு” எனத் தெரிவித்தார்.
மேலும், “மாநில கூட்டணி தலைவர்கள் பரபரப்பிற்காக கூட்டணி பற்றி ஏதாவது பேசிவிடுவார்கள். கூட்டணி என்பது கட்சியின் கொள்கை முடிவில் எடுக்கப்பட வேண்டியது. பாஜகவை பொறுத்தவரை மாநில தலைவர்கள் முடிவு எடுக்க முடியாது.தேசிய தலைமையின் முடிவு தான் இறுதியானது” என்றார்.
இதையும் படிங்க...திமுகவை வீழ்த்த எம்.ஜி.ஆருக்கு துணை நின்றவர்கள் ரஜினியை ஆதரிப்பார்கள் - சைதை துரைசாமி