கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின், மீன்பிடிக்கும் திறனை அதிகரிக்கவும், கால விரயத்தை தவிர்க்கவும் ரூ.31.20 கோடி மதிப்புள்ள 2600 மீன்பிடி விசைப் படகுகளின் மோட்டார்களை 40 விழுக்காடு மானியத்துடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக 15 மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. ஆனால், பிற கட்சிகள் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில், ஆவின் பால் உட்பட எந்த உணவிலும் எந்தக் கலப்படமும் இல்லை. மீறி கலப்பட பொருள்கள் விற்பனை செய்தால், உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் தான், தமிழ்நாட்டுக்கு இம்சை அரசன். திமுக ஆட்சிக்காலத்தில் மத்தியில் அங்கம் வகித்தனர். அப்போது அவர்களுக்கு இருந்த அதிகாரத்திற்கு தமிழ்நாட்டில் தேனும் பாலும் ஓடியிருக்கும். அதையெல்லாம் செய்யாமல் மக்களை இம்சை செய்தனர். ஆகவே, ஸ்டாலின் தான் தமிழ்நாட்டின் இம்சை அரசன். அவர் தான் பல்வேறு நல்ல திட்டங்களை தடுத்து வருகிறார். சமூக நீதியை குழி தோண்டி புதைத்தவர்கள் திமுகவினர் தான். அவர்கள் முதலமைச்சர் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது.
மேலும், பண்பாட்டின் அடிப்படையில்தான் மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வாழ்த்து தெரிவித்தனர்; வேறு எந்தக் காரணமும் இல்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திடுக' - மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை!