கரோனாவால் சென்னைக்குட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,821 பேரும், தண்டையார்பேட்டையில் 3,781 பேரும், தேனாம்பேட்டையில் 3,464 பேரும், கோடம்பாக்கத்தில் 3,108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள் தலைமையில் கரோனா தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, தெருத் தெருவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதன்படி, சிந்தாதிரிப்பேட்டையில் இன்று ஆய்வுசெய்த அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் 600க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. மாநகர் முழுவதும் உள்ள 8 லட்சம் முதியவர்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
38,000க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில்தான் உயிரிழப்பின் விழுக்காடு 0.8 என மிகக்குறைவான அளவில் உள்ளது. குணமடைந்தோரின் விழுக்காடு 55ஆகவும் உள்ளது.
கரோனா விவகாரத்தில் அரசியல் செய்யும் கட்சிகள் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மக்களைத் திசை திருப்புவதில் வல்லவர் ஸ்டாலின் என்பதால், இவ்விவகாரத்தில் அரசியல் செய்யாமல் திமுக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். சுகாதாரத் துறைச் செயலராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது முழுக்க முழுக்க, நிர்வாக காரணங்களுக்காகவே. அதில் எவ்வித அரசியக் உள்நோக்கமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அமைச்சர் பதவியிலிருந்து விஜய பாஸ்கரையும் நீக்க வேண்டும்' - மு.க. ஸ்டாலின்