திருப்பத்தூர்: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடந்த 15ஆம் தேதி வேலூர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அதன்படி முன்னாள் அமைச்சர் வீரமணியுடன் தொடர்புடையவர்கள், நெருங்கியவர்கள், உறவினர்கள், பங்குதாரர்கள் ஆகியோரது 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (செப்.16) காலை முதல் 13 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.
சோதனையில், 34லட்சத்து ஆயிரத்து 60 ரூபாய் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம், ஒன்பது சொகுசு கார்கள், 4.987 கிலோ தங்கம், 7.2 கிலோ வெள்ளி, முக்கிய சொத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள், வங்கி கணக்குப் புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டது.
சோதனை முடிவு
பின்னர், வழக்கிற்குத் தொடர்புடைய பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதுமட்டுமின்றி வீட்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் குவிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. காலை 6 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது.
18 மணி நேரத்திற்கும் மேலாக வீரமணியின் வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வந்தனர். இரவு 11 மணிக்கு சோதனையை முடித்துவிட்டு தங்களது வாகனங்களில் அலுவர்கள் புறப்பட்டனர். அப்போது, வீட்டின் வெளியே காத்திருந்த அதிமுக தொண்டர்கள், அலுவலர்களின் வாகனத்தை தாக்கி, முற்றுகையிட்டனர்.
இச்சம்பவத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வீரமணி, “அமைச்சர் வீட்டில் சோதனைகள் நடைபெறுவது நடைமுறை சாத்தியம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிட்டதட்ட ஐந்து ஒன்றிய செயலாளர்கள், கழக பல்வேறு பொறுப்பாளர்களின் வீட்டில் சோதனை என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி செய்துள்ளனர்.
சோதனை அச்சுறுத்தல்
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்காகவே ஆளும்கட்சி சோதனை என்ற பெயரில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாங்கள் எதையும் நீதிமன்றத்தின் வாயிலாக சந்திக்க தயாராக உள்ளோம். எங்களது வீட்டில் சோதனையிட்டதில் அவர்களுக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
எந்த ஒரு வழக்கையும் தொடுப்பதற்கு தயாராக உள்ளோம். அது தேர்தல் களமானாலும், நீதிமன்றமானாலும், மக்கள் மன்றமனாலும், எந்த விதத்தில் சந்திக்க வேண்டுமோ அந்த விதத்தில் சந்திக்க தயாராக உள்ளோம்.
இதுபோன்ற சோதனை என்ற அச்சுறுத்தல் எல்லாம் கடந்த காலத்தில் கடந்து வந்தவர்கள் தான், எதையும் எம்ஜியார் இந்த இயக்கத்தை உருவாக்கும் போது இந்த இயக்கம் நூறு நாள் தான் நடைபெறும் என்று கூறினார்கள் ஆனால் அதையும் தாண்டி 50 ஆண்டுகளை கடக்க கூடிய நிலையில் அதிமுக உள்ளது. கழகத்தை வளர்க்க நாங்கள் பாடுபடுவோம்” என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் வீட்டில் அள்ள அள்ள குறையாத பணம்!