சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நெசவாளர்கள் தரமானதும், விலைக் குறைவானதுமான காதி மற்றும் கைத்தறி துணிகளை கண்கவரும் வடிவமைப்புகளுடன் நெய்வதை தொழிலாகக் கொண்டுள்ளனர். இருப்பினும் காதி மற்றும் கைத்தறி துணிகளை விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனால், நெசவுத் தொழில் செய்வோர்க்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்க இயலாததால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின் கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளர்களுக்கு கை கொடுத்து உதவும் பொருட்டு, அவர்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் பொருட்களை, காந்தியடிகள் பிறந்த நாளான இன்று அமெட் பல்கலைக்கழகத்தின் சுமார் 4,000 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கலைஞர் கருணாநிதி சாலை மற்றும் இராஜீவ் காந்தி சாலை பகுதிகளில் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்யவதென்ற ஒரு சமூக சேவைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இத்திட்டத்தின்படி ஒரே நாளில் குறைந்தது ரூ.1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளுடன், கிராமப் பொருட்களையும் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சமூக சேவைத்திட்டத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் 15 விற்பனை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு நெசவாளர்கள் மற்றும் கிராமத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து பல சீரிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக கோ.ஆப்டெக்ஸ் மற்றும் காதி பொருட்களை பெருமளவில் விற்பனை செய்ய விற்பனை மையங்கள் புதுப்பித்தல், பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், ஆன்லைன் விற்பனை, புதிய டிசைன் அறிமுகம், விளம்பரம் மற்றும் மொபைல் ஆப் ஆகியவைகள் செய்யப்பட்டதால் கோஆப்டெக்சில் இதுவரை இல்லாத அளவாக ரூ.155 கோடி விற்பனை சென்ற ஆண்டிலும் இந்த ஆண்டில் ரூ.55 கோடியும் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனை இலக்காக ரூ.175 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காதி துறையிலும் புதிய வகை எம்ப்ராய்டிரீ மற்றும் பிரிண்ட்டு பட்டு புடவைகள், புதிய சோப்புகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய வகைகள் விற்பனை அறிமுகப்படுத்தியதன் காரணமாக சென்ற ஆண்டு ரூ.47 கோடியாக சாதனை விற்பனை செய்யப்பட்டு, இந்த ஆண்டு ரூ.60 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது காந்திய மண் என சூளுரைப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு