சென்னை: சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று(ஆகஸ்ட் 27) நடந்தது. இதில், பங்கேற்று பேசிய திருவையாறு சட்டப்பேரவை திமுக உறுப்பினர் துரை சந்திரசேகர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்றி பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் போல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சுங்கச்சாவடிகளில் விலையில்லாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கேவண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாட்டில் 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில், பெரும்பாலானவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. நகர்ப்புறங்களில் மட்டும் 16 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன.
சென்னையை ஒட்டியுள்ள வானகரம், நெமிலி, பரனூர், சூரப்பட்டு, சென்னை சமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற ஏற்கெனவே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். கூட்டத்தொடர் முடிந்த பிறகு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தவுள்ளோம்" என்றார்.
மேலும், மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும்நிலையில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், கலைஞர் சாலை ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் வசூலிக்கப்படாது எனவும் எ.வ. வேலு தெரிவித்தார்.
இதையும் படிங்க: மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வைகோ வேண்டுகோள்