சென்னை: சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.26) நேரம் இல்லாத நேரத்தில் பேசிய மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, ஆதார் எண் இணைக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கைரேகை சரியாக பதிவாகவில்லையென பல இடங்களில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், அதற்கு மாற்று வழியை அரசு பரிசீலித்து வருகிறதா என்பதை அறிய விரும்புவதாகவும் கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ”ஆதார் எண் இணைக்கப்பட்டு விரல்ரேகை சரிபார்ப்பின் மூலம் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி ரேஷன் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் வந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
பிரதிநிதிகளை நியமிப்பது எப்படி?: பிரதிநிதிகளை நியமிப்பதற்கான படிவங்கள் ரேஷன் கடைகளிலும், உணவுத்துறையின் www.tnpds.gov.in என்ற உணவுத் துறையின் இணையதளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. அதை நிரப்பி விண்ணப்பித்து, பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 2,39,803 அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் உள்ளன. அவற்றில் 22.4.2022 வரை 1,79,47,639 பரிவர்த்தனை மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 1,76,30,498 பரிவர்த்தனைகள் (98.23%) கைரேகை சரிபார்ப்பின் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்த தகுதியான அட்டைதாரர்களுக்கும் விற்பனைப்பொருட்கள் வழங்குவது தடைபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கைரேகை மற்றும் இதர பிரச்னைகள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கின்றன.
மகாராஷ்டிரா, தெலங்கானா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்கருவிழி சரி பார்ப்பின் மூலம் செயல்படுத்தும் நடைமுறை ஏற்கெனவே உள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் இரண்டு இடங்களில் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்... ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் லாக்-அப் மரணம் குறித்து விசாரிக்கப்படும்'