சென்னை: தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ளதாக அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டது. பள்ளிகளை திறப்பதற்கு உண்டான வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டு விரைவில் வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் துறை ரீதியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை இன்று (ஆக. 17) மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
முக்கிய ஆலோசனை
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் பேசிய அவர், "சில தினங்களுக்கு முன்னர் பணி இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் புதிய இடத்தில் பணியில் சேர வேண்டும். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு அதுகுறித்து முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ஆனால் பள்ளிகளை செப்டம்பர் 1ஆம் தேதி திறப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுரை வழங்கியுள்ளார். அந்த வகையில் 20ஆம் தேதிக்கு பிறகே பள்ளிகள் செப்.1 ஆம் தேதி திறக்கப்படுவது குறித்து உறுதியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கல்வித்துறை ஆலோசனை