சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகத்தில், இன்று (ஆக.15) 76ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து சாரண சாரணிய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற பள்ளி மாணவ-மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
முதலமைச்சருக்கு நன்றி: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, '76ஆவது சுதந்திர தினத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுவதில்லை என்பதாலேயே கொண்டு வரப்பட்டது. எனவே, அம்மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்ந்து நடத்தப்படுவதில் எந்தவித குழப்பமும் இல்லை; தற்போது உள்ள அதே நடைமுறையே தொடரும். மாணவர்கள் எந்தவித குழப்பமும் அடைந்து தன்னம்பிக்கை இழந்துவிடக்கூடாது.
பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு: கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 25ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிதியைப்பெற்று பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக, பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7000 கோடி செலவிடப்பட உள்ளது. அதில் நடப்பாண்டில் ரூ.1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட உள்ளது.
மாணவர்களுக்கு உளவியல் பாடம்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலர் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்தப் பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருடைய செயல்பாடுகள் சரியாக இருக்கிறதா என்றுதான் பார்க்கவேண்டும்.
அதில், அரசு எச்சரிக்கையாக இருக்கிறது; இது குறித்து என்னிடம் கூட ரங்கராஜ் பாண்டே தொடர்பில் இருக்கிறார். அது தவறு எனக்கூற முடியாது' எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த மதிய உணவு திட்டம்