சென்னை: தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி பால் முகவர்கள், கந்துவட்டி கொடுமையில் பாதிக்கப்படுவது குறித்து வெளியிட்டுள்ள காணொலியில்,
"கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், கொரட்டூர் பகுதியில் பால் வணிகத்தில் ஈடுபட்டுவந்த பால் முகவருமான செல்வகுமார் நேற்று (ஜூலை 20) காலை அவரது கடையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது.
அவரது மறைவிற்குக் காரணமான கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கும் சூழலில் அவர்களைப் பிணையில் வெளிவிடாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களது சங்கம் வலியுறுத்துகிறது.
இழப்பீடு வேண்டும்
அத்துடன் மறைந்த செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு கந்துவட்டி கும்பலால் மிரட்டல் வர வாய்ப்புள்ளதால் அதிலிருந்து அவரது குடும்பத்திற்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதோடு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கும்பல்களைக் கண்டறிந்து அடியோடு வேரறுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பால் முகவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தங்கம்செய்யாததைச் சங்கம் செய்யும்
பிரச்சினைகள் எதுவாயினும், எந்நேரமாயினும் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும்பட்சத்தில் அதனைச் சட்டரீதியில் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். 'தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்' என்பதை பால் முகவர்கள் சங்கம் உறுதியளிக்கிறது.
மக்களுக்குச் சேவை செய்துவரும் பால் முகவர்களுக்கு குறைந்த வட்டியில் குறைந்த ஆவணங்களைப் பெற்று வங்கிக் கடன் வழங்கிட ஆவன செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" எனப் பேசியுள்ளார்.
தனி வாரியம் வேண்டும்
பிள்ளைக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்யும் தாயைப் போல பால்வளத் துறை சார்ந்தோருக்கு நலவாரியம் அமைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை எதிர்காலத்தைக் காத்திட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கைவைத்துள்ளது.