சென்னை: தமிழ்நாட்டில் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கக் கோரி கொடைக்கானல் மனோஜ் இமானுவேல், திருச்சி நித்திய சௌமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
நவீன தகவல் தொடர்பு சாதனங்கள்
இந்த வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வில் நேற்று (டிசம்பர் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தியதன் மூலம் 69 சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
யானைகள் கடக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள 19 கி.மீ தூரத்திற்கு வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், யானைகள் கடந்து செல்ல தண்டவாளங்களுக்கு அடியில் பாதை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒத்திவைப்பு
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், "யானைகள் மட்டுமல்லாமல் எந்த விலங்குகளும் ரயிலில் அடிபட்டு பலியாவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும். ரயில் தண்டவாளங்களை ஒட்டி சூரிய மின்சக்தி வேலிகளை அமைக்கலாம்" என யோசனை தெரிவித்தனர்.
யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் தெர்மல் ஸ்கேனிங் முறையில் எச்சரிக்கும் அதி நவீன கேமராக்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யலாம் என தெரிவித்த நீதிபதிகள், ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதை தடுக்க, ரயில்வே எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து வனத்துறையுடன் கலந்தாலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.