சென்னை: கரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது என ,பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதினார்.
இதுகுறித்து வெளியான செய்தியை மையமாக வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,"ஆக்ஸிஜனை பிற மாநிலங்களுக்கு மாற்றம் செய்யக்கூடாது என முதலமைச்சர் கடிதம் எழுதியது பற்றாக்குறை காரணமல்ல. பாதிப்படைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஆக்ஸிஜன் இருப்புக் குறைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பதாக குற்றச்சாட்டு வந்துள்ளதால், புகார்களை 104 என்ற தொலைபேசி தெரிவிக்கலாம். ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க திடீர் ரெய்டுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் பொது விற்பனை கவுண்டரை 2 அல்லது 3 நாட்களில் திறக்க உள்ளோம். மூன்றடுக்கு முகக்கவசம், எண்-95 முகக்கவசம், கையுறை, மருந்துகள் என போதுமான அளவிற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன் ஆகியோர் போதுமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை உயர் நீதிமன்ற கிளை செவிலியர் தேர்விற்குத் தடை விதித்துள்ளது. இதுவரை 52 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மே 1ஆம் தேதிக்கு பிறகும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்ந்து இலவசமாக தடுப்பூசி போடப்படும். தெலங்கானா, ஆந்திராவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படும் ஆக்ஸிஜனை திருப்பி அனுப்புவது குறித்து விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் (மே.1) முழு ஊரடங்கு அறிவிக்கலாம். ஏப்ரல் 28ஆம் தேதி முதல் இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடலாம். வாக்கு எண்ணிக்கை தினத்தில், வாக்கு எண்ணிக்கைத் தொடர்புடைய வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம்.
மருந்து, தடுப்பூசி மருந்து தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக விநியோகம் செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில், மருந்துகளின் விலைகளை அரசு கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகள், மருத்துவமனைகளை அணுகும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்களை வெளியிட வேண்டும். இரு மாநிலங்களின் நிலவரங்கள் கண்காணிக்கப்படும்" என தெரிவித்து வழக்கு விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க உத்தரவிடுவோம்' சென்னை உயர் நீதிமன்றம்!