சென்னை: தேனாம்பேட்டையைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் என்பவர் தனக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரான தனக்கு 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரி ரூ.3,695 வசூலிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அரையாண்டிற்கு 7,170 ரூபாயாக உயர்த்தி ஜூன் 28 ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானது என்றும் அதிகார வரம்பை மீறிய செயல் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தெருக்கள், பகுதிகள் என அனைத்திற்கும் ஒரே மாதிரியான சொத்து வரி நிர்ணயித்துள்ளது சட்ட விரோதமானது. அதனால், தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எந்த முறைப்படி சொத்து வரி கணக்கிடப்பட்டு உயர்த்தப்பட்டது என்ற விவரங்களைத் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தபோது, உரிய விவரங்களை மாநகராட்சி தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கணக்கீட்டு முறை தெரிந்தால் தான் உயர்த்தப்பட்ட வரி சரியானதா? என்பதை கண்டறிய முடியும் என தெரிவித்த நீதிபதி, அதுகுறித்த ஆவணங்களை வரும் ஆக.3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார். அதுவரை மனுதாரருக்கு அனுப்பபட்ட நோட்டீசில் உள்ள உயர்த்தப்பட்ட தொகைக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கிட ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்த திட்டம்