சென்னை: வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் கடந்த மாதம் 26ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் சாதி வாரியாக மக்கள் தொகை புள்ளி விபரங்களைச் சேகரிப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த ஆணையம் தனது பணியை தொடங்குவதற்கு முன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு அரசியல் காரணங்களுக்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சாதிவாரி புள்ளி விபரங்களைப் பெறுவதற்கு நீதிபதி குலசேகரன் தலைவரான ஆணையத்துக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 10.5விழுக்காட்டை வன்னியர்களுக்கு கொடுத்து விட்டால் மீதம் உள்ள சாதியினர் பாதிக்கப்படுவர் என்பதால் சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மதுரை கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் இந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: வன்னியர்களுக்காக போராடியவரை நாய் என்பதா? ராமதாசுக்கு திமுக எம்பி கண்டனம்!