சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டு வெள்ளையடிக்கப்படுவதாகவும், நாமக்கல் சோளீஸ்வரர் கோயிலின் பழமையான கற்கள் உடைக்கப்படுவதாகவும், இதேபோல் திருவெள்ளாறை கோயிலும் சேதப்படுத்தப்படுவதாகவும் ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரோட்டில் உள்ள கோயில் ஒன்றின் பொங்கல் மண்டபம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் கோயிலின் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பழமையைப் புதுப்பிக்க இயலாது
அப்போது நீதிபதிகள், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களைப்போல அற்புதமான கட்டுமானத்துடனும், சிறந்த தொழில் நுட்பத்துடனும், முறையான ஆகம விதிப்படியும் கட்டமுடியாது எனத் தெரிவித்தனர்.
அதனால், பழமையான கோயில்களை முறையாகப் புனரமைத்து, சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து, மனுதாரரின் புகார்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: AK 62 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!