சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலராக பொன்.மாணிக்கவேல் பணியாற்றியபோது, தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்ததாகவும், இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, 'பத்திரிகையாளர் என வழக்கு தொடர்ந்துள்ள சேகரன் ஒரு போலி பத்திரிக்கையாளர்' என பொன் மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, 'உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் (Tamil Nadu Press Council) என்ற அமைப்பை 3 மாதங்களில் தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டு இருந்தனர்.
திரும்பபெறப்பட்ட உத்தரவு
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று (மார்ச் 16) விசாரணைக்கு வந்தபோது, 'தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கில் பிரஸ் கவுன்சில் அமைப்பது தொடர்பாக எந்த கோரிக்கையும் வைக்காத நிலையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும்' என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தங்கள் வழக்கை ஆரம்ப கட்டத்திலிருந்து மீண்டும் விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
தள்ளிவைப்பு
அதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டுமென நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டனர். பின்னர் சேகரன் தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்காக இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ஹிஜாப் தடை: 'அம்பேத்கர் இருந்திருந்தால் கண் கலங்கியிருப்பார்'!