ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் கோவை - பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை, முறையாக அமல்படுத்தும்படி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அரசு தரப்பு விளக்கம்
அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு மார்ச் 2ஆம் தேதியான இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படி உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை என்றும், தடை உத்தரவால் கிராம மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அப்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலால் விபத்து
மனுதாரர் தரப்பில் அரசு உத்தரவிற்குப் பிறகு, பாதியாக வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், 16 டன்னுக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கக் கூடாது; கேமரா பொருத்த வேண்டும் என உத்தரவிட்டாலும் முறையாக நிர்வகிக்கவில்லை என சுட்டிக்காட்டினர். பிப்.27ஆம் தேதி சரணாலயப் பகுதியில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
திட்டம் வகுக்க உத்தரவு
போக்குவரத்தைச் சீர்படுத்த மனுதாரர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை அரசுக்கு வழங்க வேண்டும். மேலும், அந்த கருத்துகளைப் பெற்று திட்டம் வகுக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவ்வாறு திட்டம் வகுக்கும்போது வனத்துறையை ஆலோசித்து, கிராம மக்களின் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லாமல் வகுக்கவும் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் வழக்கு விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: 'மனித மலம் அள்ள வற்புறுத்தினால் தண்டனை' - தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையர் தகவல்