சென்னை: நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உத்தரவை அமல்படுத்தக்கோரிய வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகி, மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருவதாகவும், இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
அபராதம் மட்டும் போதாது: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வெறும் அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது எனவும்; இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருக்கும் வணிக நிறுவனங்களை மூடி சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதேபோன்று, நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு வழங்கும் நிலையங்கள் முறையாக செயல்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர், பழுதாகி உள்ள 33 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் வழங்கும் இடங்களையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அன்றைய தினம் அதனை ஆய்வு செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: துபாயில் கோட்டு சூட்டுடன் வலம்வரும் முதலமைச்சர் - பின்னணி என்ன?