சென்னை: கடந்த 1990ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்த ஜாய் என்பவருக்கு, அவ்வாரியம் 5474 சதுர அடி நிலத்தை விற்றது. அந்த நிலம் முழுவதும் தன்னுடையது எனக் கூறி லட்சுமி அம்மாள் என்பவர் சிவில் நீதிமன்றத்தில் 2002ஆம் ஆண்டில் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என சென்ற நிலையில், அந்த நிலம் வாரியத்திற்குச்சொந்தமானது என 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் லட்சுமி அம்மாளின் வாரிசுதாரரான அல்லி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுவில்,’ தனக்கு தாயார் செட்டில்மென்ட்டாக அளித்த நிலத்தை, வேறு ஒருவருக்கு ஒதுக்கீடு செய்த வீட்டு வசதி வாரியத்தின் ஆணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு இன்று (ஆக.28) விசாரணைக்கு வந்தபோது, வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வீரசேகரன், தாயாரின் மனு உச்ச நீதிமன்றம் வரை சென்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வாரிசுதாரர் என்ற பெயரில் புதிய மனு தாக்கல் செய்திருப்பதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சட்டவிரோதமாக அனுபவித்து வந்த வீட்டு வசதி வாரிய நிலத்தில் இருந்து தன்னை காலி செய்து விடக்கூடாது என்பதற்காக 20 ஆண்டுகளாக லட்சுமி அம்மாளும், தற்போது அவரது வாரிசும் வழக்குகளை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டு, இது நீதிமன்ற நடைமுறைகளை தவறாக பயன்படுத்துவதாகத் தெரிவித்து, அல்லியின் மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அபராதத்தொகையை சென்னை அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்குச் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற்றவருக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் அளிக்கவும்.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை