சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, ஈபிஎஸ் தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 37 பேர், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 27 பேர் என 64 பேர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று (ஆக.30) விசாரணைக்கு வந்தபோது, அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பை சேர்ந்த 64 பேருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கில் சம்பந்தபட்ட 64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திடவும், தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம், 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும் நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றம்